பல்சுவை உணவகம்

Blogger Widgets

05 நவம்பர், 2012

டெங்கு வை நாமே ஒழிப்போம் !!!!


நோய் எதிர்ப்புக் குறைவால் டெங்கு ஆதிக்கம்:

சிக்குன் குனியா, பறவைக் காய்ச்சல் போன்றவற்றைவிட இப்போது கூடுதலான பரபரப்பு டெங்கு காய்ச்சலால் ஏற்பட்டிருக்கிறது. டெங்குவால் நேரிட்டுள்ள உயிரிழப்புகளால் ஏற்பட்டுள்ள அச்சமே இதற்குக் காரணம்.

"ஏடிஸ்' என்ற வகைக் கொசுதான் இந்த டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சலைப் பரப்புகிறது.

"ஏடிஸ்' கொசு நல்ல தண்ணீரில்தான் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. பெண் கொசுக்கள்தான் மனிதர்களைக் கடித்து காய்ச்சலை ஏற்படுத்துகின்றன.

டெங்கு அல்லது சிக்குன் குனியா பாதிக்கப்பட்டவரை ஒரு கொசு கடித்துவிட்டால், அந்தக் கொசுவின் வயிற்றில் இருக்கும் வைரஸ் கிருமிகள் அந்தக் கொசு இடும் முட்டையிலும் கலந்து, புதிதாக புழுவாகி உருவாகும் கொசுவின் உடலிலும் டெங்கு கிருமி உயிர்ப்போடு இருக்கும் என்று தெரியவருகிறது.

தொட்டியில் உள்ள நல்ல தண்ணீரில் கொசு முட்டையிட்ட நிலையில் நாம் தடுப்பு என்ற பெயரில் தண்ணீரை கீழே சாய்த்துவிட்டால் மட்டும் போதாது, அந்த முட்டைகள் அழியும் வகையில், சோப்பு போட்டு தொட்டியைக் கழுவ வேண்டும்.

நம்மால் ஏன் கொசுக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை? ஒவ்வொரு ஊரிலும் டெங்கு சாவுகளைத் தடுக்க முடியவில்லை?

காரணங்கள் இப்படியாக இருக்கலாம். நாம் மேற்கொள்ளும் பணிகளால் அவற்றை அழிக்க அல்லது கட்டுப்படுத்த முடியாமல் இருக்கலாம். அதாவது, நம்முடைய மருந்துகளையும் உண்டு செரிக்கும் திறனை அவை பெற்றிருக்கலாம்.

அல்லது நம்முடைய விழிப்புணர்வுப் பணிகள் அத்தனையும் "கொடியசைத்துத் தொடங்கி வைக்கும்' சம்பிரதாய நிகழ்ச்சிகளாக மட்டுமே இருக்கலாம். வெளிப்படையாக சொன்னால், வெற்று அறிக்கைகளாகக்கூட இருக்கலாம்.

இயல்பாகவே தற்போது அரசு இயந்திரத்திலுள்ள பணியாளர் பற்றாக்குறை முக்கிய காரணமாக இருக்கலாம்.

மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது பல உள்ளாட்சி அமைப்புகளில் மிகச்சிலராகவே இருக்கும் துப்புரவுப் பணியாளர்களால் இந்த அசாதாரணச் சூழலைச் சமாளித்துப் பணியாற்ற முடியாமல் போயிருக்கிறது.

ஏறத்தாழ பேரிடர் மேலாண்மைப் பணியைப் போலவே மாறியிருக்கிறது, கொசு ஒழிப்புத் திட்டமும். இதைச் செயல்படுத்த இன்னும் கூடுதலான பணியாளர்களும், அர்ப்பணிப்புள்ள பணியும் தேவை.

ஒரு கொசுவின் வாழ்க்கை சுழற்சி வெறும் 21 நாள்கள்தான் என்கிறது பூச்சியியல் பிரிவு. அந்த 21 நாளில் வளர்ந்த கொசுவை ஒரு சுற்று மருந்தடித்து கொன்றுவிடுவதுடன், அடுத்த 21 நாள்களுக்குள் தண்ணீரில் முட்டையிட்டுள்ள புழுக்களை அதே நிலையில் மருந்து தெளித்து அழித்துவிட வேண்டும்.

இந்த 21 நாள் சுற்றை தீவிரமாகத் திரும்பத் திரும்ப ஒரு பகுதியில் மேற்கொண்டால் ஏறத்தாழ அச்சுறுத்தும் நிலையைக் கணிசமாகக் குறைக்க முடியும். காரணம், இந்த வகைக் கொசுக்கள் அரை கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் பறக்காதவை.

"சிக்குன் குனியா' காய்ச்சல் தீவிரமாக இருந்தபோது கிராமப் பகுதிகளில் இந்த முறை பரிசோதனை அடிப்படையில் சில இடங்களில் மேற்கொள்ளப்பட்டதும் கவனிக்கத்தக்கது.

பருவமழை சற்றே இடைவெளி விட்டிருக்கும் நிலையில் கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது. நல்ல வெயில் அடிக்கும்போதும், குளிர்ந்த காற்று வீசும்போதும் இந்தக் கொசுக்கள் வெளியே வருவதே இல்லை.

இடைப்பட்ட காலத்தில் - அதிலும் குறிப்பாக, ஒரு நாளின் முற்பகலிலும், பிற்பகலிலும் இந்தக் கொசுக்கள் கடிப்பதே டெங்கு பரவலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தினமும் காலை, மாலை இரு வேளையும் அதிகாரிகளுடன் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆலோனை மேற்கொள்கின்றனர். ஆனால், களத்தில் இறங்கி, தெருக்களில் பணியாற்ற ஆள்கள் போதுமான அளவு இல்லை. பல இடங்களில் மாணவர்கள், தன்னார்வலர்கள் இறக்கிவிடப்படுகிறார்கள்.

எல்லாம் போகட்டும். எந்தவித சுகாதாரக் கவலையும் இன்றி சில சமூகக்குழுக்கள் நம்முன்தான் வாழ்கின்றனர். அவர்களை எல்லா வகையான கொசுக்களும், உயிரினங்களும் கடிக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவர்களுக்கு எந்த நோயும் தொற்றுவதில்லையே, ஏன்?

சில பத்தாண்டுகளுக்கு முன் இந்த மனித உடலில் இருந்த நோய் எதிர்ப்பு சக்தி என்ற அரிதான சக்தி வெகுவாகக் குன்றியிருக்கிறது. எல்லாவிதமான வைட்டமின்களையும் மாத்திரைகளில் பெறத் துணிந்துவிட்டிருக்கிறோம்.

காய்ச்சல் என்று மருத்துவமனைகளுக்குப் போனால் உடனே நமக்கு போடப்படுவது "ஆன்டிபயாட்டிக்' எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்து. அடுத்த நாள் செய்தித்தாள்களில் மத்திய சுகாதாரத் துறை விளம்பரம் வருகிறது - அதிகளவில் "ஆன்டிபயாட்டிக்' எடுத்துக் கொள்ளக் கூடாது என்று!

நாம் சாப்பிடும் உணவு நமக்கு கொழுகொழு கோழியைப் போல பருமனான - அழகான உடலமைப்பைத் தரலாம், வலிமையான உடலைத் தரவில்லை என்பதே உண்மை.

இதுகுறித்து சிந்தித்து, மாற்றாமல் விட்டால் அடுத்து இன்னும் ஏதாவது ஒரு பெயரில் ஒரு காய்ச்சல் வரலாம்! உயிரிழப்புகள் ஏற்படலாம். தடுப்பு, தவிர்ப்பு, விழிப்புணர்வு என்ற சொற்களின் பொருள்கூட வலுவிழக்கலாம்!
Related Posts Plugin for WordPress, Blogger...
Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner