பல்சுவை உணவகம்

Blogger Widgets

09 நவம்பர், 2012

மாயப் பிரபஞ்சம்...


மயக்கும் மாயப் பிரபஞ்சம்... 

2004-ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மார்க் ஸூக்கர்பர்க் என்ற இளைஞர் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஃபேஸ்புக் என்ற சமூக வலைத் தளத்தைத் தொடங்கினார். இன்று அதற்கு உலகளாவிய வகையில் ஒரு பில்லியன் (நூறு கோடி) வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

உங்களிடம் இன்டர்நெட் வசதியிருந்தால் போதும். நீங்களும் அதன் வாடிக்கையாளராகி விடலாம். அதற்குக் கட்டணம் ஏதுமில்லை. இ
ன்டர்நெட்டுக்கு ஆகும் செலவுதான். அதேபோல ட்விட்டர் என்ற சமூக வலைத்தளம் 2006-ஆம் ஆண்டில் ஜாக்டோர்சி என்பவரால் தொடங்கப்பட்டது.

சமூக வலைத்தள வாடிக்கையாளர்கள் "மாயப் பிரபஞ்சம்' என்ற மின்னணு உலக வாசிகளாகத் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை கூடிய விரைவில் சீனா, இந்தியா போன்ற நாடுகளின் மக்கள்தொகையை விஞ்சி விடும்.

ஒருவகையில் பார்த்தால் மாயப் பிரபஞ்சம் நிஜ உலகின் வல்லரசுகளைவிட ஆற்றலும் வலிமையும் மிகுந்ததாக உள்ளது.

எல்லா நாடுகளிலும் சமூக வலைத்தள வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை வரிசையில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, இந்தோனேசியா, மெக்சிகோ ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

உலகின் எந்த நாட்டில் எந்த ஊரில் உள்ளவரும் அவ்வுலகவாசிகளுடன் உடனடியாகத் தொடர்புகொண்டு கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். நிஜ உலகின் சட்டதிட்டங்களும், எல்லை வரையறுப்புகளும், குடிமையுரிமைகளும், ஆட்சி அமைப்புகளும் நாடுகளைப் பிரித்துக் காட்டுவதைப்போல மாயப்பிரபஞ்ச உலகில் பிரிவினைகள் கிடையாது.

யாரும் யாருடனும் இன, மத, நிற, கொள்கை வேறுபாடுகளைக் கடந்து நட்புறவும் ஊடாட்டமும் கொள்ள முடியும். இதன் காரணமாக இந்த மாயப் பிரபஞ்சம்தான் உண்மையான ""உலகளாவிய கிராமம்'' என்ற லட்சிய நிலைக்கு மிக நெருக்கமாக வருகிறது.

கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்பதை இந்த மாயப் பிரபஞ்சத்தின் அடையாள மந்திரமாக வைத்துக் கொள்ளலாம்.

படை வலிமையும் பொருளாதார வலிமையும் மிக்க நாடுகளால்கூடச் சாதிக்க முடியாத ஒரு சாதனையைச் சமூக வலைத்தளங்கள் சாதித்திருக்கின்றன. மிரட்டலோ, கட்டாயப்படுத்தலோ இல்லாமல் நூறு கோடி மக்களை மாயப் பிரபஞ்சத்தின் பிரஜைகளாக்கியதுதான் அது.

புதியதோர் உலகத்தின் பிரஜைகளாவதன் அனுகூலங்களை உணர்ந்து சுய விருப்பத்தின்பேரில் அவர்கள் இணைந்திருக்கிறார்கள். நிஜ உலகில் மங்கியும் மறைந்தும் வருகிற நட்புத் தேடல், பாராட்டல், கருத்துப் பரிமாற்றம் மற்றும் ஆய்வு போன்ற செயல்பாடுகள் மாயப் பிரபஞ்சத்தில் அபரிமிதமாக நிகழ்கின்றன.

சமூக வலைத்தளங்கள் பிரம்மாண்டமான தகவல் களஞ்சியங்களாக மாறியுள்ளன. காலையில் சாப்பிட்ட சிற்றுண்டி முதல், நள்ளிரவில் கண்ட விசித்திரக் கனவு வரையான பலவகைப்பட்ட தன்னிலைத் தகவல்கள் பல கோடிக்கணக்கில் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. குழுக்களும் அடையாளங்களும் நேர்முகத் தொடர்புகள் மூலம் உருவாக்கப்படுவது கடந்த கால விஷயமாகிவிட்டது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் உபயமாக உறவினர்களும் நண்பர்களும் கூடிக் கலந்துரையாடுவதுகூடக் குறைந்து வருகிறது. விளம்பர இடைவேளைகளில் மட்டுமே தொலைபேசி உரையாடல்கள் நடைபெற்று முடிந்து விடுகின்றன.

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான தொலைக்காட்சிப் பெட்டிகள் இருக்கிற நிலை ஏற்பட்ட பின் குடும்ப உறுப்பினர்கள்கூடத் தமக்குள் ஊடாடுவது குறைந்துவிட்டது.

தனி நபர்கள் "தனிமை நபர்'களாகித் தனியறைகளில் முடங்கி விடுகிறார்கள். வீடுகளில் திண்ணைகள் இல்லாமல் போனதால் திண்ணைப் பேச்சுகளும் இல்லாமல் போயின. கடற்கரைகளிலும், தெருமுக்குகளிலும் கோவில் மண்டபங்களிலும் டீக்கடை பெஞ்சுகளிலும் கூடி அரசியல் அல்லது சினிமா வம்பளப்பதும் குறைந்துவிட்டது.

அண்டை அயலாரிடம் தொடர்பு கொள்ளவும் ஆர்வமில்லை. எதிர் பிளாட்டில் ஒரு கொலை நடந்தது என்பதை டி.வி. செய்தி ஒளிபரப்பில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டதாக ஒருவர் சொல்லும் காலம்கூட வரலாம்.

ஒருவர் இன்னொருவரைச் சந்திப்பது, அவருடன் உரையாடுவது, அவருடன் சேர்ந்து பணியாற்றுவது போன்ற செயல்பாடுகளின் வடிவங்கள் புதிய மின்னணுச் சாதனங்களால் மாற்றியமைக்கப்பட்டு விட்டன. "சமையலாகி விட்டது, சாப்பிட வரலாம்' என்பதைக்கூட மனைவி கைப்பேசி மூலம் தன் அறையிலிருக்கிற கணவனுக்குத் தெரிவிக்கும் கட்டம் வந்துள்ளது.

தொலைக்காட்சி அல்லது இன்டர்நெட்டில் மூழ்கித் தனிநபர்கள் தனித்தீவுகளாகி விட்டனர். திடல்களில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது மறைந்து கணினியில் தனியாக விளையாடுவது பரவி வருகிறது.

சமூக வலைத்தளங்கள் ஒருவர் தன் அறையைவிட்டு வெளிப்படாமலேயே உலகெங்கிலுமிருந்து நண்பர்களைச் சம்பாதிக்க உதவுகின்றன. அரபு நாடுகளிலும் சீனாவிலும் வெகுஜன அபிப்பிராயத்தைக் குவியப்படுத்த ஃபேஸ்புக்கும், ட்விட்டரும் பெரிதும் உதவியிருக்கின்றன. அரபு நாடுகளில் ஆட்சிகளைக் கவிழ்க்கும் அளவுக்குக் குறிப்பிட்ட இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் சில நிமிஷங்களில் கூடி ஆர்ப்பாட்டம் செய்ய வைக்க முடிந்திருக்கிறது.

முன்பெல்லாம் ஒரு தலைவர் அறிக்கைகள் மூலமும், சுவரொட்டிகள் மூலமும் விளம்பரப்படுத்தி மக்களைத் திரட்டி ஓர் அரசியல் இயக்கத்தைத் தொடங்க மாதக்கணக்கில் அவகாசம் தேவைப்பட்டது. ஆனால், இன்று குறுஞ்செய்திகள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றின் உதவியால் உடனடியாகத் தகவலைப் பரப்பிச் சில மணி நேரங்களில் ஓரிடத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரளும்படி செய்துவிட முடியும். இணையதள இணைப்புடன் கூடிய கைப்பேசிகள் ஏறத்தாழ 60 சதவீத பேஸ்புக் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

அரசுகளின் அராஜகங்கள் மற்றும் அடக்குமுறைகள் உடனடியாக உலகெங்கும் தெரிவிக்கப்படுகின்றன. இவ்விதமாக நடமாடியவாறே தகவல் பரப்பும் வசதி புரட்சியாளர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும்கூட, அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும், உத்திகளை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது.

இவ்வாறான உடனடித் தயாரிப்புப் போராட்டங்களில் தலைவர், தொண்டர் என்ற அடுக்கு அமைப்பு இருப்பதில்லை. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் சம அந்தஸ்துடன் தலைமை வகித்து இயக்கங்களை முன்னெடுத்துச் செல்கிறார்கள். தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளாமலேயே அவர்களால் செய்திகளைப் பரப்ப முடிகிறது. அதன் காரணமாகத் துணிச்சலும் அதிகமாயிருக்கிறது.

ஆனால், அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷமல்லவா! சமூக வலைத்தளங்களின் அபரிமிதமான வளர்ச்சியும் பரவலும் வீச்சும் பல சிக்கல்களையும் உருவாக்குகின்றன. மாணவர்களும் அலுவலர்களும் தொழிலாளர்களும் பணியாற்ற வேண்டிய நேரங்களில் கூடச் சமூக வலைத் தளங்களைத் திறந்து நண்பர்களுடன் அரட்டையடிப்பது, கேம்ஸ்களை விளையாடுவது போன்று மதிப்புமிக்க நேரங்களை வீணாகக் கழிக்கின்றனர். இதனால் உற்பத்தித் திறன் குறையும்.

பல கல்விச்சாலைகளும் அலுவலகங்களும் பணி நேரத்தில் "பணிக்குத் தொடர்பில்லாத மேய்தலுக்கு'க் கட்டுப்பாடுகளை விதிக்க முயலுகிறார்கள். ஆனால், புகையிலைக்கும் மதுவுக்கும் அடிமைப்பட்டவர்களைப் போலவே "மேய்தலுக்கு' அடிமைப்பட்டவர்களைத் திருத்துவதும் அசாத்தியமாக இருக்கிறது.

சர்வாதிகார ஆட்சி நடக்கிற சீனாவில்கூட பேஸ்புக்கையும் ட்விட்டரையும் முடக்கிப் போட முடியவில்லை. அங்கு பல குறுக்கு வழிகளைக் கையாண்டு கிட்டத்தட்ட 640 லட்சம் மக்கள் பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் தகவல்களைப் பரப்பிக் கொண்டேயிருக்கிறார்கள்.

பேனா நண்பர்களைப்போல பேஸ்புக், ட்விட்டர் மூலம் நண்பர்களைச் சம்பாதிக்க முடிவது எளிதாயிருப்பதும், தன் முகத்தைக் காட்டாமலும் அனாமதேயமாகவும் உரையாட முடிவதும் மோசடிகளுக்குத் துணை செய்கின்றன. 80 வயது நபர்கூடத் தன்னை ஓர் இளைஞனாக வர்ணித்துக்கொண்டு இளம்பெண்களுடன் "கடலைபோட' முடிகிறது. கடிதங்களில் எழுதத் துணியாத தகவல்களைக்கூட சமூக வலைத் தளங்களில் பதிவு செய்யத் துணிச்சல் ஏற்படுகிறது.

இன்றுவரை பேஸ்புக்கும் ட்விட்டரும் தம் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி போன்ற தகவல்களைப் பரம ரகசியமாகப் பாதுகாத்து வருகின்றன. ஆனால், வர்த்தக நிறுவனங்களும் அரசு உளவு நிறுவனங்களும் அந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பும்போது அவை "அழுத்தம்' செலுத்தக்கூடும்.

வர்த்தக நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட விருப்பம் அல்லது சுவையுள்ள நுகர்வோர் குழுக்களைக் குறி வைத்துத் தமது விளம்பரச் செய்திகளை ஏவ விரும்புகிறார்கள். அரசுகள் அதிருப்தியாளர்களை அடையாளம் காண ஆர்வம் காட்டுகின்றன. உளவு அமைப்புகள் குற்றவாளிகளைக் கண்காணித்துத் தடுப்பு நடவடிக்கையெடுக்க முயல்கின்றன. தற்சமயம் பேஸ்புக் நிறுவனம் பொருளாதாரத் தடுமாற்றத்திலிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகிலுள்ள மக்களில் கிட்டத்தட்ட 14 சதவீதம் பேர் அதன் பேரில் அளவற்ற நம்பிக்கை வைத்துத் தமது அந்தரங்கங்களையெல்லாம் அதன் வலைத்தளத்தில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். தாம் தொடர்புகொள்ளும் நபர்களிடமும் குழுக்களிடமும் விசுவாசமும் நம்பிக்கையும் கொண்டு தமது கருத்துகளைத் துணிந்து வெளியிடுகிறார்கள்.

பொருளாதார நிர்பந்தங்களுக்குப் பணிந்து சமூக வலைத்தளங்கள் தம்மிடமுள்ள தகவல்களை வெளியிட்டால் உலகின் ஒரு பெரிய ஜனசமூகக் குழுவின் நம்பிக்கையை அவை இழந்து விடும்.

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...
Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner