அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!!!
இந்த பதிவு குடியை பற்றிய பதிவு குடியால் உடலும், உள்ளமும் எத்தனை சீரழிவுகளை சந்திக்கின்றன பாருங்கள்.
குடிப்பழக்கம், சிறிது சிறிதாக செய்யப்படும் தற்கொலை முயற்சியே!
உடல் நலத்தைப் பலவிதங்களில் கெடுத்து, வாழ்க்கை நெறிமுறைகளையும் சிதைத்து, அவரின் மனநலத்தையும் வெகுவாக பாதிக்கிறது. அவரின் போக்கால் மனைவி மக்களும் மிகுந்த துன்பத்திற்கு ஆளாவதுடன் அவர்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிறது.
* குடிப்பழக்கத்திற்கான பல காரணங்களில் கூடா நட்பும் சூழ்நிலைகளும் சமூகக் கலாசாரங்களும் முக்கியமான தூண்டுகோல்களாக அமைகின்றன.
* பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோரின் குடிப்பழக்கமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். முதலில் ‘நண்பர்களுக்காக’ என்று சிறிதளவு மது அருந்த ஆரம்பிப்பதே நாளடைவில் மது அடிமை நிலைக்குக் கொண்டு சேர்த்துவிடும்.
* சாராயம், கள் மற்றும் அயல்நாட்டு மதுவகைகள் போன்றவற்றில் உள்ள போதையூட்டும் பொருளின் பெயர் ஈத்தைல் ஆல்கஹால். இது ஒவ்வொரு மதுவகையிலும் வெவ்வேறு அளவில் உள்ளது. மதுவில் உடலைப் பாதுகாக்கும் வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் என ஏதும் இல்லை.
சிறிதளவு மது அருந்தியவுடன் ஒருவித கேளிக்கை மனப்பான்மையும் போலியான மன மகிழ்ச்சியும் ஏற்படுவதால், அந்தச் சூழ்நிலையில் மதுவின் அளவை மேலும் கூட்டிச் சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. அதனால் நாளடைவில் தனது செயல்களைக் கட்டுப்படுத்தும் திறனை இழந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் சக்தி அற்றவர் ஆகிவிடுகிறார். மது அருந்தி விட்டு ஓட்டும் போது விபத்துக்கு ஆளாகி விபரீதமான விளைவுகளைச் சந்திக்கிறார்.
* சில சமூக விரோதிகள் மித்தைல் ஆல்கஹால் என்றநச்சு கலந்த விஷச் சாராயத்தை அதிக போதை ஏற்படும் என்று நம்பி விற்பதால், அதைக் குடிப்பவர்கள் கண் பார்வை இழப்பதுடன் மரணத்தையும் தழுவுகிறார்கள்.
* மதுப்பழக்கத்தினால் சிரோஸிஸ் என்னும் கல்லீரல் சுருக்க நோய் ஏற்பட்டு ரத்த வாந்தியும் மரணமும் நேரலாம்.
* உணவுக் குழாய், வயிறு மற்றும் கணையம் பாதிக்கப்படுவதால் வயிற்று வலி மற்றும் நீரிழிவு நோய் உண்டாகலாம்.
* கண் மற்றும் நரம்பு மண்டலம் பல விதங்களில் பாதிக்கப்படலாம்.
மாரடைப்பு நோய் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்தான பின் விளைவுகள் ரத்தக் குழாய்களின் பாதிப்பால் ஏற்படலாம்.
* நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா காய்ச்சல் அடிக்கடி ஏற்படும்.
* அடிக்கடி மனைவியிடம் சண்டையிட்டு குடும்ப அமைதியை இழந்துவிடுவார்கள். அடிக்கடி குற்ற உணர்வுகளுக்கு ஆளாகி, தன்னம்பிக்கையை இழந்து அவதிப்படுவார்கள்.
* நினைவாற்றலும் குறைந்துவிடுவதால் சற்று நேரத்திற்குமுன் நடந்ததுகூட நினைவில் இருக்காத சூழ்நிலை உருவாகலாம்.
* குடிக்கு அடிமையானவர் குடிப்பழக்கத்தை நிறுத்திய சில மணி நேரத்திலேயே உடல்நடுக்கம், பயம், பதட்டம், மனத் தளர்ச்சி, எரிச்சல், தூக்கமின்மை, ரத்த அழுத்தம் அதிகமாகுதல் மற்றும் வலிப்பு ஆகியவை ஏற்படலாம்.
* மாய ஒலி, மாயத் தோற்றம், மாயத் தொடு உணர்வு முதலியவை நோயாளிக்குத் தோன்றலாம். வேடிக்கையான கொடிய மிருகங்கள் போன்ற மாயத் தோற்றங்களால் பயந்து, தம்மை அவற்றிடம் இருந்து காப்பாற்றும்படி கூறி அழுவார்கள். சில சமயங்களில் பயத்தால் தற்கொலைக்கும் முயற்சிப்பார்கள். பிறரைத் தாக்கவும் கூடும். எனவே நோயாளியை மருத்துவரிடம் தாமதிக்காமல் கொண்டு செல்ல வேண்டும்.
குடிப்பழக்கத்தில் இருந்து விடு படுவது எப்படி…?
குடிப்பழக்கத்தில் இருந்து எப்படியாவது மீள வேண்டும் என்ற உறுதியான எண்ணமும் நோயாளியின் பூரண ஒத்துழைப்பும் மிக முக்கியமானது. நீண்ட நாள் மதுப்பழக்கம் உள்ளவர்கள் மருத்துவக் கண்காணிப்பின் பேரில்தான் அந்தப் பழக்கத்தை நிறுத்த வேண்டும். அந்த நேரம் நோயாளிக்கு ஏற்படும் பயம், பதட்ட நிலை, உடல் நடுக்கம், போன்றவற்றைத் தடுக்க மருத்துவர் தேவையான மருந்துகளையும் வைட்டமின்களையும் தேவையான ஊட்டச்சத்தையும் தவறாமல் கொடுப்பார். அடுத்த நிலையில் நோயாளிக்கு மதுவை அருந்தும் ஆசையே ஏற்படாதபடி சிகிச்சை அளிப்பதுதான் மிக முக்கியமாகும்.
நவீன மருத்துவத்தில் மருந்துகள் பல உள்ளன. அவற்றில் உடலுக்கு ஏற்புடையதாக இருக்கும் மருந்தை மருத்துவர் சுமார் ஒரு வருட காலம் சாப்பிட சொல்வார்.
மனதில் நம்பிக்கையும் தைரியமும் உருவாகி மீண்டும் வாழ்வில் அவர்களுக்கு பிடிப்பு ஏற்படுகிறது. பிறகு, பொறுப்பு உணர்ச்சியும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணமும் ஏற்பட்டு, நாளடைவில் முழுவதும் குணமடைகிறார்.
நன்றி...
மீண்டும் சந்திப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக