பல்சுவை உணவகம்

Blogger Widgets

27 அக்டோபர், 2012

நான் படித்தது 7

மெல்லச் சாகும் கங்கை… புனித நதியில் புற்று நோய் கனிமங்கள்!

இந்தியாவின் புனிதநதியாக போற்றப்படும் கங்கையில் தொழிற்சாலை கழிவுகளும், இறந்தவர்களின் உடல்களும் மிதக்கின்றன. காங்கையை தூய்மையான நதியாக மாற்ற எத்தனையோ திட்டங்கள் தீட்டப்பட்டும் நாளுக்கு நாள் கங்கை நதி மாசடைந்துதான் வருகிறது.

மாசடைந்து வரும் கங்கை:
கங்கையில் இறந்தாலோ அங்கே இறந்தவர்களை எரியூட்டினாலோ சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பது நம்பிக்கை. இதன்காரணமாக இறந்தவர்களின் உடலை கங்கை நதியில் விட்டுவிடுகின்றனர். இறந்தவர்களின் அஸ்தியை இங்கு கொண்டுவந்து கரைக்கின்றனர். இதனால் கங்கை நீர் பல ஆண்டுகளாக அழுக்கடைந்து,மாசுபட்டு வருகிறது.

கலக்கும் தொழிற்சாலை கழிவுகள்:
சல சலத்து ஒடும் கங்கை நதியில் தொழிற்சாலை கழிவுகள் கலக்கின்றன. இதனால் கங்கையின் மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புனிதம் தேடி செல்லும் மக்கள் புற்றுநோய்க்கு இரையாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்பதுதான் வேதனை.

கங்கையில் புற்றுநோய் காரணிகள்:
கங்கை நீரில் புற்று நோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ் (carcinogens)எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கங்கை நதியையொட்டிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு,நாட்டின் பிறபகுதிகளில் வசிப்பவர்களை காட்டிலும் மிக எளிதில் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்க மக்கள்:
கங்கையில் உள்ள மாசுக்கள் குறித்து தேசிய புற்றுநோய் பதிவு மையம் ஆய்வு மேற்கொண்டது. அதில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் தெரியவந்தன. கங்கை நீரில் மிக அதிக உலோகத்தன்மையும்,நச்சு ரசாயனம் காணப்படுகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசம்,பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் உள்ள கங்கை நதி படுகை பகுதிகளில் இது அதிகமாக காணப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கங்கையை காக்க உயிர்துறந்த சாது:
கங்கையின் புனிதம் காப்பதற்காகவே உயிர்துறந்தவர் சுவாமி நிகமானந்தா. உத்தரக்கண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்த துறவி சுவாமி நிகமானந்தா, மத்ரி சதான் ஆசிரமத்தை சேர்ந்தவர். கங்கை நதி மாசுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கங்கை நதியை சுற்றி அமைந்துள்ள சட்டவிரோத கல் குவாரிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி முதல், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவங்கி ஜூன் மாதம் 15ம் தேதி உயிரிழந்தார்.

புனித கங்கை உயிர்பெறுமா?:
கங்கை நதியின் புனிதம் காக்க கடந்த 1985ம் ஆண்டு முதல் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. ராஜீவ்காந்தி காலம் முதல் பல ஆயிரம் கோடி ரூபாய் தண்ணீராய் செலவழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் கங்கை மாசுபடுவதை யாராலும் தடுத்து நிறுத்த இயலவில்லை. கங்கையை காக்க பலரும் அறிவுறுத்தியும் சரியான நடவடிக்கை எடுக்காமல் திணறுகின்றன மத்திய மாநில அரசுகள். இதனால் பலரின் பாவத்தை கழுவிய கங்கை நதி பாவமாய் ஓடிக்கொண்டிருக்கிறது.

புனித கங்கையை உயிர்பிக்க இந்த அரசுகள் ஏதாவது செய்யப்போகின்றனவா அல்லது கங்கை மெல்ல மடிவதை அனுமதிக்கப்போகின்றனரா என்பதுதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கேள்வி.

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...
Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner